புதுடில்லி:
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் சுதேசி கொள்கையே வளர்ந்த மற்றும் தற்சார்பு கொண்ட இந்தியாவை உருவாக்கும் நமது உறுதிப்பாட்டின் அடிப்படைத் தூணாக விளங்குகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்திய அவர், சுதேசி கொள்கைக்கு காந்தி அளித்த முக்கியத்துவம் இன்று தற்சார்பு இந்தியா என்ற கனவிற்கு வலுவான அடித்தளமாக இருப்பதாக குறிப்பிட்டார். அவரது ஆளுமையும், செயல்பாடுகளும் நாட்டு மக்களை கடமை மற்றும் பொறுப்புணர்வின் பாதையில் தொடர்ந்து ஊக்குவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், அகிம்சை, வாய்மை மற்றும் அறவழி ஆகியவற்றை ஆயுதமாகக் கொண்டு இந்திய சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்திய மகாத்மா காந்தியின் நினைவு தினத்தில் அவருக்கு வணக்கம் செலுத்துவதாக கூறினார். அமைதி, சகிப்புத்தன்மை, ஒருமைப்பாடு மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு போன்ற உயரிய மதிப்புகளை போதித்த அவரது தியாகங்களை போற்றி, அந்த போதனைகளை பின்பற்றுவதே அவருக்குச் செய்யும் உண்மையான மரியாதை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
