ராமேஸ்வரம்: நான்காவது ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நான்காவது ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதன் நிறைவு விழா இன்று ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட தலைவர்கள் தமிழும் காசியும் கொண்ட வரலாற்றுச் சிறப்புகளை எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், காசியும் ராமேஸ்வரமும் யாராலும் பிரிக்க முடியாத உறவை கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். இந்த இரு புனித தலங்களும் இந்தியாவின் ஆன்மீக, பண்பாட்டு இணைப்பை பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன், காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் நீண்ட கால வரலாற்றுத் தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழில் உரையாற்றி, மகாகவி பாரதியின் கனவை காசி தமிழ் சங்கமம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்தார்.
