சென்னை: கூட்டணிக்குள் காங்கிரஸ் கட்சியைத் தக்கவைக்க திமுக அரசு தமிழக மக்களின் நலனை அடமானம் வைத்துள்ளதாக பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
தமிழக விவசாயிகளின் உயிர்நாடியான காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப் போவதாக கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு தனது நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியுடன் திமுக தனது கூட்டணியை உறுதி செய்த அடுத்த நாளே கர்நாடக காங்கிரஸ் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது, தனது கூட்டணிக்குள் காங்கிரஸ் கட்சியைத் தக்கவைக்க திமுக அரசு தமிழக மக்களின் நலனை அடமானம் வைத்திருப்பதை வெளிப்படுத்துகிறது.
தமிழகத்தின் உரிமையை பாதுகாக்காமல் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக திமுக அரசு செயல்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. திமுகவின் அரசியல் நலனுக்காக தமிழகத்தின் உரிமையை பலிகடா ஆக்க முடியாது. தமிழக மக்களின் நலனுக்கு திமுக செய்கிற துரோகம் இதுவாகும்.
எனவே, உடனடியாக தனது கூட்டணிக் கட்சித் தலைவரான கர்நாடக காங்கிரஸ் முதல்வருடன் பேசி, மேகதாது திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை கைவிட வலியுறுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
