கர்நாடக சட்டசபையில் பரபரப்பு: உரையை வாசிக்காமல் வெளியேறிய கவர்னர்
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை இன்று (ஜனவரி 22) கூடிய உடன், அரசின் உரையில் தவறான தகவல்கள் இருப்பதாகக் கூறி, கவர்னர் தாவர்சந்த் கெலாட் முழு உரையையும் வாசிக்காமல் அவையை விட்டு வெளியேறினார். இந்த சம்பவம் சட்டசபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கும் போது, மாநில அரசு தயாரித்து வழங்கும் உரையை கவர்னர் வாசிப்பது நீண்டகால நடைமுறையாக இருந்து வருகிறது. அந்த உரையில் அரசின் சாதனைகள், செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் எதிர்கால இலக்குகள் இடம்பெறும்.
அதே நேரத்தில், அரசு வழங்கும் உரையை முழுமையாக வாசிக்க வேண்டுமென்று கட்டாய விதி எதுவும் இல்லை. உரையில் சந்தேகத்திற்குரிய தகவல்கள் இருப்பதாக கவர்னர் கருதினால், அதைத் திருத்த அரசு தரப்புக்கு அறிவுறுத்தும் அதிகாரமும் அவருக்கு உள்ளது.
உரையை வாசிக்காமல் வெளியேறிய கவர்னர்
இந்நிலையில் இன்று கூடிய கர்நாடக சட்டசபையில், கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டி, மூன்று வாக்கியங்களை மட்டும் வாசித்துவிட்டு, முழு உரையையும் படிக்காமல் அவையை விட்டு வெளியேறினார்.
இதற்கு ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சட்டசபையில் கடும் அமளி
கவர்னரின் நடவடிக்கையை தொடர்ந்து, அவையில் கூச்சலும் குழப்பமும் நிலவியது. சட்டசபை முழுவதும் பரபரப்பான சூழல் உருவானது.
சமீப காலத்தில் இதேபோல், தமிழக சட்டசபையில் கவர்னர் ரவி மற்றும் கேரள சட்டசபையில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆகியோரும் அரசின் உரையை முழுமையாக வாசிக்காமல் புறக்கணித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் சித்தராமையாவின் கடும் கண்டனம்
இந்த விவகாரம் குறித்து சட்டசபையில் பேசிய முதல்வர் சித்தராமையா,
“அரசியலமைப்பு சட்டத்தின் 176 மற்றும் 163 ஆகிய பிரிவுகளை கவர்னர் மீறியுள்ளார். கர்நாடக கவர்னரின் இந்த செயல் அரசியலமைப்புக்கு எதிரானது,” என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும்,
கவர்னரின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும், கவர்னரின் போக்கை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் சித்தராமையா தெரிவித்தார்.
