பெங்களூரு: ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் புகாரில் சிக்கிய கர்நாடகா கலால் துறை அமைச்சர் ஆர்.பி. திம்மாப்பூர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கர்நாடக சட்டசபையில் பாஜ எம்எல்ஏக்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகா கலால் துறை அமைச்சர் ஆர்.பி. திம்மாப்பூர், ரூ.6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழலில் ஈடுபட்டுள்ளதாக, அம்மாநில மது விற்பனையாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். மதுக்கடை உரிமங்கள் வழங்குதல், உரிமம் புதுப்பித்தல், அதிகாரிகள் பணிமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில், லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன.
கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பிய இந்த குற்றச்சாட்டு குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவரும் மூத்த பாஜ தலைவருமான ஆர். அசோகா, சபாநாயகர் யு.டி. காதர் இடம் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், பாஜவின் இந்த கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த பாஜ எம்எல்ஏக்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, கலால் துறை அமைச்சர் ஆர்.பி. திம்மாப்பூர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா தலைமையில் பாஜ எம்எல்ஏக்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா கட்சி எம்எல்ஏக்கள் சட்டசபை வளாகத்தில் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாலை நேரத்தில், பாஜ எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபை வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.
