சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில், தவெக தலைவர் விஜய் ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த செப்டம்பர் 27ம் தேதி, கரூரில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில், கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், எஸ்.பி. ஜோஷ் தங்கையா, கூடுதல் எஸ்.பி. பிரேமானந்தன், டி.எஸ்.பி. செல்வராஜ், கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் உள்ளிட்ட அதிகாரிகளை டில்லிக்கு அழைத்து சிபிஐ விசாரணை நடத்தியது.
அதேபோல், தவெக முன்னணி நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் மற்றும் கரூர் மாவட்ட செயலர் மதியழகன் ஆகியோரிடமும் தனித்தனியாக 9 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
விசாரணையின் போது, கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கான காரணங்கள் குறித்து, தவெக நிர்வாகிகள் சிபிஐ அதிகாரிகளிடம் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கையாக, தவெக தலைவர் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. வரும் ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
