கரூர் கல்குவாரி தாக்குதல்: செய்தியாளர்கள் மீது நடந்த கொலைவெறி தாக்குதலுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்
கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே செயல்பட்டு வரும் சட்டவிரோத கல்குவாரியில் நடைபெறும் கனிமவளக் கொள்ளை குறித்து செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் கிருஷ்ணராயபுரம் சிவாயம் கிராமத்தில் கனிமவளக் கொள்ளை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு ரூ.23.55 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருந்த போதிலும் அந்த கல்குவாரி தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தகவல் சேகரிக்க தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் திருச்சி நிருபர் கதிரவன் அப்பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது, கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் கும்பல், நிருபர் கதிரவனை சுற்றிவளைத்து கொலை வெறியுடன் தாக்கியுள்ளது. ஒளிப்பதிவாளரிடம் இருந்த கேமரா, மைக் உள்ளிட்ட உபகரணங்களை பறித்துக்கொண்ட அந்த கும்பல், இருவரையும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
தகவலறிந்த காவல்துறையினர் கிருஷ்ணராயபுரம் பகுதிக்கு தனிப்படையை அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில் திமுக எம்எல்ஏ பழனியாண்டி உள்ளிட்ட சுமார் 50 பேர் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உத்தரவின் பேரில் டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, நிருபர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், சட்டவிரோத கல்குவாரி கொள்ளையை கேள்வி எழுப்பியதற்காக ஊடகவியலாளர்கள் மீது கொலை நோக்குடன் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், சட்டவிரோத கனிமச் சுரண்டலுக்கு பின்னால் உள்ளவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
