சென்னை: கஞ்சா மாடல் திமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மிகுந்த கவலைக்கிடமாக மாறி விட்டதாக, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை கணபதி பகுதியில் நேற்று இரவு போதைப்பொருள் பயன்படுத்திய கும்பல்களுக்கு இடையே திடீர் தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக் கொண்டனர். இதில் வெற்றி என்ற இளைஞர் தலையில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்தார்.
அந்த நிலையிலும், போதை கும்பல் பெரிய கல்லை எடுத்து அவரை கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தலையிட்டு கும்பலை விரட்டி அடித்தனர். பின்னர் படுகாயமடைந்த வெற்றியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
கஞ்சா மாடல் திமுக அரசின் கீழ் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மிகுந்த கவலைக்கிடமாக உள்ளது. கோவை கணபதியில் கஞ்சா போதையில் இருந்த கும்பல் ஒரு இளைஞரை கொடூரமாக தாக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர்வாசிகள் விழிப்புடன் தலையிட்டிருக்காவிட்டால், இந்த தாக்குதல் உயிரிழப்பாக முடிந்திருக்கும்.
இது தனிப்பட்ட சம்பவம் அல்ல. சமீபத்தில் திருத்தணி, சென்னை வேளச்சேரி மற்றும் தற்போது கோவை என மாநிலம் முழுவதும் போதை தொடர்பான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறுகின்றன. திமுகவுடன் தொடர்புடையவர்கள் போதைப்பொருள் வர்த்தகத்தில் மீண்டும் மீண்டும் சிக்கும்போது, கஞ்சா வலையமைப்புகள் ஏன் கட்டுப்பாடின்றி வளர்கின்றன என்பது தெளிவாகிறது. இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
