ஓய்வூதிய அறிவிப்பு தேர்தல் ஏமாற்று வேலை: முதல்வர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
திருச்சி: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள புதிய ஓய்வூதியத் திட்டம் தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஏமாற்று அறிவிப்பு என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், ஐந்து ஆண்டுகள் எதையும் செய்யாத திமுக அரசு தற்போது ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளதாக குற்றம் சாட்டினார். ஆட்சியின் ஆயுட்காலம் முடிவடையும் தருணத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதன் பின்னணி என்ன என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.
நர்சுகள், தூய்மைப் பணியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் இன்னும் நிறைவேறாமல் உள்ள நிலையில், இந்த ஓய்வூதிய அறிவிப்பு ஜாக்டோ–ஜியோ அமைப்பினரையும் பொதுமக்களையும் ஏமாற்றுவதற்கான முயற்சி என அவர் கூறினார்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல்–டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்தாலும், அவற்றில் எதையும் நிறைவேற்றவில்லை என்றும் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் அரசியல் மாற்றங்களை உருவாக்கி விட்டே செல்கிறார் என்றும், அவரது வருகைக்குப் பிறகு மாற்றங்கள் தெளிவாக தெரிய வரும் என்றும் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல்கள் நடைபெற்று வருவதாகவும், கூட்டணி தொடர்பாக தற்போது உறுதியான முடிவுகள் எதையும் கூற முடியாது என்றும் அவர் கூறினார்.
யார் முதல்வராக வருவார் என்பதைக் காட்டிலும், யார் முதல்வராக தொடரக்கூடாது என்பதே எங்களுக்கு முக்கியம் என தெரிவித்த அவர், ஆன்மிகத்திற்கு எதிரான இந்த ஆட்சியை மாற்றுவதே பாஜகவின் நோக்கம் என்றும் கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
