ஓமன் மற்றும் குவைத்தில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என அந்நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் அறிவுறுத்தியுள்ளன.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. பல பகுதிகளில் வெடிப்பு சத்தங்கள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஈரான் அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், ஈரானும் பதிலடி ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அனைத்து இந்தியர்களும் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். செய்திகள் மற்றும் குவைத் அரசின் அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
அவசர உதவிக்காக community.kuwait@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், +965 65501946 என்ற உதவி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஓமனில் உள்ள இந்திய தூதரகமும் தேவையற்ற பயணங்களை தவிர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளது. அவசர உதவிக்காக 8007 1234 (கட்டணமில்லா எண்), +968 9828 2270 மற்றும் cw.muscat@mea.gov.in, cons.muscat@mea.gov.in ஆகிய முகவரிகளின் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
