ஓபிஎஸ் உடன் அவரது மகனும், முன்னாள் எம்பியுமான ரவிந்திரநாத் மற்றும் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் உள்ளிட்ட ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்தனர்.
அதிமுக சார்பில் மூன்று முறை முதல்வராக பதவி வகித்த ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டால், திமுக சார்பில் தேனி தொகுதியில் அவர் போட்டியிட முயற்சி மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, தேனி மாவட்டம் போடிநாய்க்கனூர் தொகுதி எம்எல்ஏ பதவியில் இருந்து ஓபிஎஸ் ராஜினாமா செய்தார். சட்டப்பேரவை செயலரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
“அழிவுகாலம் நெருங்கிவிட்டது” – சசிகலா அறிக்கை
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக மூத்த தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது என சசிகலா தெரிவித்துள்ளார். தமிழகத்திலிருந்து அகற்றப்பட வேண்டிய தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில், தாய் கழகம் என நினைத்து திமுகவில் இணைவது தவறான முடிவு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமைகளுக்கான காரணம் ஒருவரே எனவும், தானே அதிமுக என அறிவித்து கொண்டவர்கள் கட்சியை வழிநடத்துவதாக கூறி சுற்றியுள்ளவர்களையும் ஏமாற்றி வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். திமுகவின் கட்டுப்பாட்டில் இருந்து அதிமுகவில் உள்ளவர்களை வெளியேற்றி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கொள்கைகளுக்கு விரோதமாக செயல்பட்டு வருவோரின் அழிவுகாலம் நெருங்கிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
வரும் சட்டசபை தேர்தலில் தனது தலைமையில் எம்ஜிஆரின் ஆதரவாளர்களும், ஜெயலலிதா வழியில் உள்ளவர்கள் எதிரிகளையும் துரோகிகளையும் தோற்கடிப்பார்கள் என சசிகலா குறிப்பிட்டுள்ளார்.
