தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் கருணைத்தொகை வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த இபிஎஸ், ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கும், எம்ஜிஆர் உருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சிக் கொடி ஏற்றி வைத்து நிர்வாகிகளுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அதிமுகவின் 3ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு நிருபர்களிடம் பேசியார்.
அவர் கூறியதாவது: ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் விலைவாசி அதிகரித்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சொத்துவரி, குடிநீர் வரி, மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரி உயர்வுகள் காரணமாக குடும்பச் சுமை அதிகரித்துள்ளது.
இதனால் மக்களின் சுமையை குறைக்கும் வகையில், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் கருணைத்தொகை வழங்கப்படும். இந்த தொகை ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000, பிளஸ் 2 வரை படித்து பதிவு செய்தவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.8,000 இல் இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தப்படும். தைப் பொங்கல் தினத்தில் பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும்.
கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாகவும் உயர்த்தப்படும்.
நிதி நிலைமை குறித்து பேசிய அவர், வருவாயை பெருக்கும் வழிகளை நிபுணர்கள் மூலம் கண்டறிந்து, அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களை செயல்படுத்துவோம் என்றார்.
தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்பான முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நீதிமன்ற தீர்ப்புகளை மதித்து திமுக அரசு செயல்பட வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கு தொடர்பான விவகாரங்களில் நீதிமன்ற உத்தரவுகளை அரசு பின்பற்றவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
