சென்னை: மத்திய அரசு பணிகளில் ஐ.ஜி. அந்தஸ்திலான பதவிகளை பெற விரும்பும் இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்) அதிகாரிகள், அதற்கு முன்பாக, மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) உள்ளிட்ட மத்திய அரசு பணிகளில் எஸ்.பி. மற்றும் டி.ஐ.ஜி. பதவிகளில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் கட்டாயமாக பணியாற்றி இருக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான மாற்றத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கொண்டு வந்துள்ளது. இந்திய காவல் பணி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவது மற்றும் மத்திய அரசு பணிகளில் நியமனம் செய்வது தொடர்பான விதிமுறைகளில் இந்த புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சி.பி.ஐ. உள்ளிட்ட மத்திய அரசு அமைப்புகளில் ஐ.ஜி. அந்தஸ்திலான பதவிகளை பெறுவதற்கு முன், ஐ.பி.எஸ். அதிகாரிகள் எஸ்.பி. மற்றும் டி.ஐ.ஜி. நிலைகளில் மத்திய அரசு பணிகளில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.
இந்த விதிமுறை 2011 ஆம் ஆண்டும் அதற்கு பிறகும் ஐ.பி.எஸ். அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இனி மாநில அரசுகள் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அல்லது பணியிட மாற்றம் செய்யும் போது, இந்த புதிய விதிமுறை பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் மற்றும் டி.ஜி.பி.க்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த நடைமுறை ஜனவரி 28 முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, இத்தகைய இரண்டு ஆண்டுகள் கட்டாய பணி விதிமுறை இந்திய நிர்வாக சேவை (ஐ.ஏ.எஸ்) அதிகாரிகளுக்கு மட்டும் அமலில் இருந்தது. தற்போது, ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், இரு சேவைகளுக்கும் இடையிலான பணி வரன்முறை சமன் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
