நியூயார்க்: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் மார்ச் மாத தலைமை பொறுப்பை ஏற்றுள்ள அமெரிக்கா தயாரித்துள்ள செயல்திட்டத்தை ஏற்க ரஷ்யா மற்றும் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பொதுவாக பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை ஒரு நாடு ஏற்கும் போது, அந்த மாதத்தில் நடைபெறும் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய பணித் திட்டம் தொடக்கத்திலேயே அங்கீகரிக்கப்படும் நடைமுறை உள்ளது.
ஆனால் இந்த முறை அமெரிக்கா தயாரித்துள்ள செயல்திட்டம் மீது ரஷ்யா மற்றும் சீனா எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கான முக்கிய காரணமாக ஈரானின் அணு திட்டம் தொடர்பான விவகாரம் கூறப்படுகிறது. ஈரானின் அணு திட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் 2006ஆம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 1737 தீர்மானத்தின் கீழ் ஒரு குழுவை அமைத்திருந்தது.
அந்த குழு தொடர்பான விளக்கக் கூட்டத்தை இந்த மாத செயல்திட்டத்தில் அமெரிக்கா சேர்த்திருந்தது. இதுவே ரஷ்யா மற்றும் சீனாவின் எதிர்ப்பிற்கு காரணமாக அமைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ரஷ்யா வெளியிட்ட அறிக்கையில், ஈரானுக்கு எதிரான தடைகளை மீண்டும் அமல்படுத்தும் விவகாரத்தை அமெரிக்கா இந்த செயல்திட்டத்தில் சேர்த்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அம்சத்தை சேர்க்க வேண்டாம் என்று முன்னதாகவே தெரிவித்திருந்தாலும் அமெரிக்கா அதனை கவனிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த திட்டத்தை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டதால் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியதாக அமைந்தது என்றும் ரஷ்யா விளக்கியுள்ளது.
இந்த சூழ்நிலையில் பாதுகாப்பு கவுன்சிலின் மார்ச் மாத பணித் திட்டம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை.
இதையடுத்து அமெரிக்கா தனது மாத செயல்திட்டத்தை தனியாக வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
