சிட்னி: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக உலகக் கோப்பைகளை வென்ற அணிகளில் முன்னணியில் இருக்கும் ஆஸ்திரேலியா, ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது.
50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் ஆறு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவுக்கு, டி20 வடிவம் பெரும்பாலும் சவாலாகவே இருந்து வருகிறது. இந்த பார்மட்டில் இதுவரை 2021 ஆம் ஆண்டில் ஒருமுறை மட்டுமே அந்த அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
நடப்பு தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி மற்றும் இலங்கை அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி ஆகியவை ஆஸ்திரேலியாவின் முன்னேற்ற வாய்ப்பை பாதித்தன. மேலும், ஜிம்பாப்வே – அயர்லாந்து போட்டி மழையால் ரத்தானதால் ஜிம்பாப்வேக்கு கூடுதலாக ஒரு புள்ளி கிடைத்தது. இதனால் ஆஸ்திரேலியாவின் சூப்பர் சுற்று கனவு முறிந்தது.
டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா முதல் சுற்றிலேயே வெளியேறுவது இது முதல் முறை அல்ல. 2009 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரிலும், லீக் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளிடம் தோல்வியடைந்து அந்த அணி வெளியேறியிருந்தது.
அதேபோல், 50 ஓவர் உலகக் கோப்பை தொடரிலும் ஆஸ்திரேலியா மூன்று முறை ஆரம்பத்திலேயே வெளியேறியுள்ளது. 1979, 1983 மற்றும் 1992 ஆகிய ஆண்டுகளில் அந்த அணி முதல் சுற்றிலேயே அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கூட, 2013 மற்றும் 2017 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா குரூப் சுற்றைத் தாண்ட முடியவில்லை. அந்த தொடர்களில் மழையால் பல போட்டிகள் ரத்தானதும் அணியின் முன்னேற்றத்தை பாதித்தது.
