புதுடில்லி: பார்லிமென்ட் வளாகத்தில் மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.
லோக்சபாவில் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் பார்லிமென்ட் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ராகுல் காந்தியும் பங்கேற்றிருந்தார். அப்போது, அந்த வழியாக மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு பார்லிமென்டுக்குள் சென்றார்.
ரவ்னீத் சிங் பிட்டு, கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை பார்த்த ராகுல் காந்தி, “இதோ ஒரு துரோகி போய் கொண்டிருக்கிறார்; முகத்தை பாருங்கள்” என விமர்சித்தார்.
மேலும், அருகில் வந்த ரவ்னீத் சிங் பிட்டுவை நோக்கி, “ஹலோ சகோதரரே… எனது துரோகி நண்பர். கவலைப்பட வேண்டாம். நீங்கள் மீண்டும் காங்கிரசுக்கு திரும்பி வருவீர்கள்” என கூறிய ராகுல், கைகுலுக்குவதற்காக தனது கையை நீட்டினார். ஆனால், ரவ்னீத் சிங் பிட்டு கை கொடுக்க மறுத்து, “ராகுல் நாட்டின் எதிரி” என கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
இதுகுறித்து ரவ்னீத் சிங் பிட்டு கூறியதாவது:
“ராகுல் கை குலுக்க முயன்ற போது, தினமும் ராணுவத்தையும் நாட்டையும் அவதூறாக பேசும் நீங்கள் தேச துரோகிகளும், நாட்டின் எதிரிகளும் ஆவீர்கள். ஒரு சர்தார், சீக்கியர்களின் கொலையாளியான இந்திரா குடும்பத்தின் வாரிசுடன் ஒருபோதும் கைகுலுக்க மாட்டார் என்று நான் பதிலளித்தேன்” என்றார்.
இதற்கிடையில், ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது.
