விழுப்புரம்: “என்னைப் பொறுத்தவரையில் அரசு என்பது, 24 மணி நேரமும் மக்களுக்காக செயல்பட வேண்டும். மக்களுக்கு தேவையற்ற அலைச்சல் இருக்கக் கூடாது,” என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
திண்டிவனத்தில், ஒவ்வொருவரின் கனவுகளை சேகரிக்கும் வகையில், ‘என் கனவு என் எதிர்காலம்’ என்ற இணையதளத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முடக்க சிலர் உச்ச நீதிமன்றம் வரை சென்றனர். அவர்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது. பல தடைகளையும் தாண்டி, இந்த திட்டம் இன்று வெற்றி பெற்றுள்ளது.
40 நாட்களில் தீர்வு
பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காண்பதில் சிக்கல்கள் இருந்தாலும், 40 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும். சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றுவது மட்டுமல்ல; தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தேவையையும் நிறைவேற்ற வேண்டும் என்பதே திராவிட மாடலின் நோக்கம்.
தமிழகத்தில் ஒவ்வொருவரின் குறைகள், தேவைகளை கேட்டு நிறைவேற்றி வருகிறோம். ‘என் கனவு என் எதிர்காலம்’ என்ற இணையதளத்தை தொடங்கி வைத்துள்ளேன். அதில், உங்கள் கனவுகளை பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறேன்.
24 மணி நேரமும்…
அரசு சேவைகள் மக்களுக்கு தடையில்லாமல், விரைவாக கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 30 முதல் 40 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டுள்ளது.
என்னைப் பொறுத்தவரையில் அரசு என்பது, 24 மணி நேரமும் மக்களுக்காக செயல்பட வேண்டும். மக்களுக்கு தேவையற்ற அலைச்சல் இருக்கக் கூடாது. நிர்வாகம் எளிமையாகவும், நிறைவாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் செயல்பட வேண்டும்.
இதனை மனதில் வைத்து தான், மக்களான உங்களுக்கு எந்தெந்த சேவைகள் அதிகமாக தேவையோ, அதை எல்லாம் நீங்கள் வசிக்கும் இடத்திலேயே வழங்க முடிவு செய்தேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
