சென்னை: எத்தனை கட்சிகள் கூட்டணியில் சேர்ந்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி என்று தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அமைந்தகரையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடியின் தமிழக வருகை, சட்டசபை தேர்தல் பிரசாரம் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க உள்ளோம். சட்டசபை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை; அதற்காக இன்னும் கால அவகாசம் உள்ளது.
பிரதமர் மோடியின் தமிழக வருகை மாநில அரசியல் சூழலில் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தற்போது பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத அளவிற்கு காட்டுத்தனமான கஞ்சா ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் சொத்து வரி மற்றும் மின் கட்டணம் உள்ளிட்டவை ஆண்டுதோறும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.
கிராமப்புறங்களில் வசிக்கும் சாதாரண மக்களுக்கும் திமுக ஆட்சியின் நிலைமை குறித்து தெளிவாக தெரிந்துள்ளது.
எனவே எத்தனை கட்சிகள் கூட்டணியில் சேர்ந்தாலும், தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
