சென்னை: திமுக சட்டசபை எம்எல்ஏ என்ற பதவி, கனிம வளங்களை கடத்துவதற்கும், கொலைவெறித் தாக்குதல் நடத்துவதற்கும் வழங்கப்பட்ட லைசன்சா? என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் திமுக சட்டசபை எம்எல்ஏ பழனியாண்டி நடத்தும் சட்டவிரோத கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது, பழனியாண்டியே நேரடியாக கொலைவெறித் தாக்குதல் நடத்தும் காணொளி வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகவியலாளர்கள் மீது, திமுக சட்டசபை எம்எல்ஏ நேரடியாக தாக்குதல் நடத்துவது, ஜனநாயகத்துக்கே அவமானம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடத்தல்காரர்கள், போதைப்பொருள் வியாபாரிகள் உள்ளிட்ட கிரிமினல்களை தேடித் தேடி பதவி கொடுத்து அழகு பார்க்கும் முதல்வர் ஸ்டாலின், இந்த சம்பவத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? திமுக சட்டசபை எம்எல்ஏ என்ற பதவி, கனிம வளங்களை கடத்தவும், கொலைவெறித் தாக்குதல் நடத்தவும் கொடுக்கப்பட்ட அனுமதியா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், சம்பவ இடத்தில் திமுக எம்எல்ஏ பழனியாண்டி இருந்ததாக எந்த குறிப்பிடுதலும் இல்லை என்றும், கொலை முயற்சி சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை காவல்துறை காப்பாற்ற முயன்றுள்ளதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது தமிழக காவல்துறை எந்த அளவுக்கு மோசமான நிலையில் செயல்பட்டு வருகிறது என்பதற்கான மற்றொரு உதாரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக சட்டசபை எம்எல்ஏ பழனியாண்டி உள்ளிட்ட அனைவர்மீதும், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
