புதுடில்லி: உள்நாட்டு நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்ய, தேவையான இடங்களில் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது: அமெரிக்காவுடனான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தற்போது ஆரம்ப நிலையில் உள்ளது. காலப்போக்கில் இந்த ஒப்பந்தம் குறித்து மேலும் தகவல்கள் வெளிவரும். இது மிகவும் நல்ல ஒப்பந்தம். அதிபர் டிரம்ப் அறிவித்த இந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை 500 பில்லியன் டாலர்களாக விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதில் எரிசக்தி துறையும் சேர்க்கப்பட்டுள்ளது. நல்ல தரத்தில் எண்ணெய் கிடைக்கும் நாடுகளிலிருந்து இந்தியா தொடர்ந்து இறக்குமதி செய்யும். உள்நாட்டு நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கொள்முதல் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரி குறைப்பை அறிவித்த நாளிலிருந்து, இந்தியா ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதை நிறுத்தி, அதற்கு பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிலிருந்து பெரிய அளவில் எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்த சூழலில், தேவைக்கு ஏற்ப மற்றும் தரத்தை அடிப்படையாக கொண்டு தேவையான இடங்களில் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வோம் என மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.
