மதுரை: “உயர் பதவிகளை வகிப்பதால் மட்டுமே யாரும் விதிவிலக்கு கோர முடியாது. சட்டத்தின் முன் அனைவரும் ஒன்றுதான்” என்று திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நிறைவேற்றாததால், மதுரை கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் இனிகோ திவ்யன் மற்றும் கோவில் செயல் அலுவலராக இருந்த யக்ஞ நாராயணன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை மார்ச் 4ஆம் தேதி விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய உத்தரவு விவரம் நேற்று வெளியிடப்பட்டது.
அதில், இந்த அவமதிப்பு வழக்கில் திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர்கள் சத்யப்ரியா, மணிசெல்வன், பொம்மதேவன், சண்முக சுந்தரம் மற்றும் ராமையா ஆகியோரை வழக்கில் சேர்க்கவும், போலீஸ் கமிஷனர் லோகநாதன் மற்றும் துணை கமிஷனர் இனிகோ திவ்யன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யவும் நீதிமன்றம் பரிசீலித்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களின் வழக்கறிஞர்கள், “தீபத்தூண் அருகே ஐந்து பேரை பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என மார்ச் 2ஆம் தேதி நீதிமன்றம் தெரிவித்த பரிந்துரையை பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும். அறநிலையத் துறையுடன் ஆலோசித்து முடிவு எடுக்க அவகாசம் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி விசாரணையை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
அன்றைய தினம் அறங்காவலர்கள் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை என்றும், போலீஸ் அதிகாரிகள் அடுத்த விசாரணை நாளில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு மார்ச் 18ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அந்த நாளில் போலீஸ் அதிகாரிகள் தகுந்த பதில் அளிக்காவிட்டால் அவர்கள்மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.
மேலும், வழக்கு தினமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
“ஒத்திவைப்பு கலாசாரத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த மாத இறுதிக்குள் ஏதேனும் ஒரு வகையில் நடவடிக்கை எடுத்து வழக்கை முடிவுக்கு கொண்டு வரப்படும். உயரதிகாரிகள் பொறுப்பற்ற கருத்துகளை தெரிவித்தால் அவர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள்” என்றும் நீதிபதி தெரிவித்தார்.
“சட்டத்தின் முன் அனைவரும் ஒன்றுதான். உயர்ந்த பதவிகளை வகிப்பதால் மட்டும் யாரும் விதிவிலக்கு கோர முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
