டேராடூன்:
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவில், கேதார்நாத் கோவில் மற்றும் பத்ரிநாத்–கேதார்நாத் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிற கோவில்களில், ஹிந்து அல்லாதோர் நுழைவதற்கு தடை விதிக்கப்பட உள்ளது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உத்தரகண்டில் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பாஜ அரசு செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு தலங்களும் ‘சார்தாம்’ என அழைக்கப்படுகின்றன.
இதுகுறித்து பத்ரிநாத்–கேதார்நாத் கோவில் நிர்வாகத் தலைவர் ஹேமந்த் திவேதி கூறியதாவது:
பத்ரிநாத், கேதார்நாத் கோவில்கள் மற்றும் நிர்வாகக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற கோவில்களில், ஹிந்து அல்லாதோர் நுழைவதற்கு தடை விதிக்கும் தீர்மானம் விரைவில் நிர்வாக வாரியக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும்.
குளிர்காலத்தை முன்னிட்டு கடந்த ஆறு மாதங்களாக மூடப்பட்டிருந்த பத்ரிநாத் கோவில் நடை, ஏப்ரல் 23ஆம் தேதி பக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த தீர்மானத்தின் மூலம், நூற்றாண்டுகளாகப் பழமையான பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட கோவில்களில் இனி ஹிந்துக்கள் மட்டுமே வழிபாட்டிற்காக அனுமதிக்கப்படுவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
