சென்னை: இல்லாத ஹிந்தி திணிப்பு விவகாரத்தை முன்வைத்து அரசியல் செய்வதை விட, மக்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் எப்போது பேசப் போகிறார் என்று பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் நேரங்களிலும், நீதிமன்றங்களில் திமுக அரசு கண்டனம் சந்திக்கும் சூழல்களிலும், ஆட்சியில் நடைபெறும் ஊழல் சம்பவங்கள் வெளிவந்து பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவாகும் நேரங்களிலும், மீண்டும் ஹிந்தி திணிப்பு விவகாரம் முன்வைக்கப்படுகிறது என அவர் குற்றம்சாட்டினார்.
அறிவாலயத்தில் உள்ள பழைய தகரப் பெட்டியைத் திறந்து இந்த இல்லாத ஹிந்தி திணிப்பு விவகாரத்தை எடுத்துக் காட்டுங்கள் என்று உங்கள் தந்தை கூறி சென்றாரா என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த ஏமாற்று அரசியல் முன்னாள் முதல்வர் காலத்திலேயே முடிந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இனியும் இதுபோன்ற பழைய அரசியல் யுக்திகளை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதுபோன்ற மக்களை நேரடியாக பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து முதல்வர் எப்போது பேசப் போகிறார் என்றும் அண்ணாமலை தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
