நியூயார்க்: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கையில் இதுவரை 17 கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதுடன் சுமார் 2,000 இலக்குகள் அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கை ‘ஆப்பரேஷன் எபிக் பியூரி’ தற்போது ஐந்தாவது நாளாக தொடர்கிறது.
இந்த நிலையில் அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் வீடியோ மூலம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், இந்த ராணுவ நடவடிக்கை தொடங்கிய முதல் 100 மணி நேரத்திலேயே ஈரானின் வான்பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணைகள், ஏவுதளங்கள் மற்றும் ட்ரோன்கள் உள்ளிட்ட பல முக்கிய ராணுவ அமைப்புகள் அழிக்கப்பட்டதாக கூறினார்.
மேலும், அமெரிக்க கடற்படை தீவிரமாக செயல்பட்டு ஈரானின் கடற்படைக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். இதன் விளைவாக இதுவரை 17 ஈரானிய கப்பல்கள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்த கப்பல்களில் ஈரானின் முக்கியமான மற்றும் செயல்பாட்டில் இருந்த நீர்மூழ்கிக் கப்பலும் அடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்க ராணுவம் தொடர்ந்து 24 மணி நேரமும் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த ராணுவ நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான போர் விமானங்கள், 50,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், இரண்டு விமானம் ஏந்திய கப்பல்கள் மற்றும் கனரக குண்டுவீசும் விமானங்கள் உள்ளிட்ட பெரிய அளவிலான படைப்பலம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அட்மிரல் பிராட் கூப்பர் தெரிவித்துள்ளார்.
