புதுடில்லி: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின் பின்னணியில், இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனை முன்னிட்டு, ஈரான் ஆதரவு போராட்டங்கள் மற்றும் அதனைத் தூண்டும் செயல்பாடுகளை கவனமாக கண்காணிக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல் துறை தலைமை இயக்குநர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில், ஈரானை ஆதரிக்கும் பேச்சாளர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகள் வெளியிடுபவர்களை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தவும், சமூக வலைதளங்களில் பரவும் வெறுப்பு பேச்சு மற்றும் வன்முறை தூண்டுதல் போன்றவற்றை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் சட்டம் ஒழுங்கை பராமரிக்க குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144 அமல்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மத அடிப்படையிலான பதற்றம் அல்லது வன்முறை சம்பவங்கள் உருவாகாமல் தடுக்க மாநில அரசுகள் முன்கூட்டியே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
