டெஹ்ரான்: ஈரானை துண்டு துண்டாக பிரித்து அதன் எண்ணெய் வளங்களை கைப்பற்ற அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் திட்டமிட்டு உள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகேய் கூறியதாவது: ராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் போர் நிறுத்தம் குறித்து மத்தியஸ்த முயற்சிகள் மேற்கொள்வது பொருத்தமற்றதாக இருக்கும். ஈரான் தொடர்ந்து தன்னைக் காத்துக் கொள்ளும்.
கடந்த வாரம் துருக்கி, சைப்ரஸ் மற்றும் அஜர்பைஜான் நாடுகள் மீது ஈரான் எந்த தாக்குதலையும் நடத்தவில்லை. மாறாக அங்கிருந்து சில தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகளின் தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. ஈரானை பிரித்து அதன் எண்ணெய் வளங்களை அபகரிக்க முயற்சி நடைபெறுகிறது.
இந்த பிராந்திய நாடுகளுடன் நல்ல மற்றும் நட்பு உறவை பேணுவதில் ஈரான் உறுதியாக உள்ளது. அதே நேரத்தில் எங்கள்மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை எங்களுக்கு உள்ளது.
மேலும் ஈரானில் உள்ள 100க்கும் மேற்பட்ட தூதரக அதிகாரிகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இருப்பினும் தற்போது நடைபெறும் தாக்குதல்கள் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டன என்று அவர் தெரிவித்தார்.
