ஈரான் ஆட்சியாளர் கமேனி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் ஈரானின் பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி, நாட்டில் வெற்றிடம் ஏற்படாது என்றும் ஆட்சி மாற்றத்திற்கான திட்டம் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, ஈரானில் அரசியல் மாற்றம் குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வருகின்றன. இந்த சூழலில், ரெசா பஹ்லவி அளித்த பேட்டியில், இஸ்லாமிய குடியரசின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதாகவும், மக்களுக்கு புதிய வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதங்களில் மக்கள் தெருக்களில் போராட்டம் நடத்தியதை நினைவுபடுத்திய அவர், பல ஆண்டுகளாக ஆட்சி மக்களை அடக்கி வைத்ததாக குற்றம்சாட்டினார். தற்போதைய ஆட்சி நீங்கினால், அணு ஆயுத அச்சுறுத்தல் உள்ளிட்ட பல பிரச்னைகள் தீரும் எனவும் கூறினார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஜனநாயக மாற்றத்தை ஆதரிக்கத் தயாராக இருப்பதாகவும், ஈரான் மக்களுக்கு நிலையான எதிர்காலத்தை உருவாக்க சர்வதேச சமூகமும் உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ரெசா பஹ்லவி பற்றி:
1960ம் ஆண்டு பிறந்த ரெசா பஹ்லவி, ஈரானின் கடைசி ஷா மன்னரின் மூத்த மகன். இஸ்லாமிய புரட்சிக்கு முன்பு பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டவர். கடந்த ஐந்து தசாப்தங்களாக வெளிநாடுகளில் வசித்து வருகிறார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்புகளை பேணி வருகிறார். ஈரானில் அரசியல் மாற்றத்திற்காக வெளிநாடுகளில் பிரசாரம் செய்து வந்துள்ளார்.
