தென் மேற்கு ஈரான் பகுதியில் பணவீக்கம் அதிகரித்ததை கண்டித்து நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக மாறியதில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
1979 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இஸ்லாமியக் குடியரசின் அரசியலமைப்பின் கீழ் ஈரானில் ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டில் பணவீக்கம் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் நாணயமான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் விளைவாக, கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் மீண்டும் பெரும் அளவிலான போராட்டங்கள் வெடித்துள்ளன.
ஆரம்பத்தில் பொருளாதார கோரிக்கைகளுடன் தொடங்கிய போராட்டங்கள், பின்னர் அரசுக்கு எதிரான முழக்கங்களாக மாறியுள்ளன. முதலில் டெஹ்ரான் மையப் பகுதியில் தொடங்கிய போராட்டங்கள், பின்னர் இஸ்பஹான், ஷிராஸ், மஷ்ஹத் உள்ளிட்ட பல நகரங்களுக்கும் பரவியுள்ளன.
போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர். இதனால், பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மோதல்கள் வன்முறையாக மாறியதில், மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், டெஹ்ரானில் இருந்து தெற்கே சுமார் 650 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரங்களில், கல்வீச்சு சம்பவங்கள் காரணமாக பொது சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
