டெஹ்ரான்: போரில் உயிரிழந்த ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா ஹொசைனி கமேனி (56) அந்நாட்டின் புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்றுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேற்காசிய நாடான ஈரானில் உச்ச அதிகாரம் கொண்டவரும் மூத்த மதகுருவுமான அயதுல்லா அலி கமேனி கடந்த 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
தலைநகர் டெஹ்ரானில் அமைந்திருந்த அவரது இல்லம் தாக்குதலில் முற்றிலும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. அந்த சம்பவத்தில் கமேனி மட்டுமின்றி அவரது குடும்பத்தினர், ஆலோசகர்கள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் இடைக்கால உச்ச தலைவராக அயதுல்லா அலிரெசா அராபி என்ற மதகுரு நியமிக்கப்பட்டிருந்தார்.
கமேனிக்கு அடுத்ததாக யார் உச்ச தலைவராக பொறுப்பேற்பார் என்ற கேள்வி எழுந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இதற்கிடையில் ஈரானின் ‘அசெம்பிளி ஆப் எக்ஸ்பெர்ட்ஸ்’ எனப்படும் 88 உறுப்பினர்கள் கொண்ட நிபுணர்கள் சபை அவசர கூட்டம் ஒன்றை கூட்டியது.
பொதுவாக இந்த நிபுணர்கள் சபை கூட்டம் கோம் நகரில் உள்ள செயலகத்தில் நடைபெறும். ஆனால் சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் அந்த கட்டிடம் சேதமடைந்ததால், பாதுகாப்பான மாற்று இடத்தில் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த அவசர கூட்டத்தின் போது அயதுல்லா அலி கமேனியின் இளைய மகன் மொஜ்தபா ஹொசைனி கமேனி புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கமேனியின் அடுத்த தலைமையாக பார்க்கப்பட்ட மொஜ்தபா, ஷியா மதகுருவாக இருந்தாலும் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அரசு பதவியையும் வகித்ததில்லை.
ஆனால் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் உளவுத்துறை அமைப்புகளுடன் நீண்டகாலமாக நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளதால் அவர் ஈரானில் மிகவும் செல்வாக்கு கொண்ட நபராக கருதப்படுகிறார்.
இந்த நியமனம் ஈரானின் அரசியல் வரலாற்றில் முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் உச்ச தலைவர் பதவி பொதுவாக மதகுருக்களின் தேர்வின் மூலம் நிரப்பப்படும்.
ஆனால் இம்முறை தந்தையிடம் இருந்து மகனுக்கு அந்த பதவி வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த முடிவு இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் அழுத்தத்தின் கீழ் எடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய மற்றும் ஈரான் எதிர்க்கட்சியுடன் தொடர்புடைய சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானில் 1979ஆம் ஆண்டு இஸ்லாமிய குடியரசு உருவானதிலிருந்து மிகச் சிலரே உச்ச தலைவர் பதவியை வகித்துள்ளனர்.
அந்த நாட்டின் மிக உயர்ந்த அதிகாரம் கொண்ட பதவியாக இது கருதப்படுகிறது. இஸ்லாமிய குடியரசின் நிறுவனர் அயதுல்லா ரூஹொல்லா கோமெனி 1979 முதல் 1989 வரை உச்ச தலைவராக இருந்தார்.
அவர் மறைந்த பிறகு ஈரானின் அதிபராக இருந்த அயதுல்லா அலி கமேனி அந்த பதவியை ஏற்று சுமார் 36 ஆண்டுகள் அந்த அதிகாரத்தை வகித்தார்.
இதற்கிடையில் இஸ்ரேல் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் வெளியிட்ட கருத்தில், ஈரானில் யார் தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவர்கள் இஸ்ரேலை அழிக்க முயற்சிக்கும் திட்டத்தைத் தொடர்வார்கள் என்று குற்றம்சாட்டினார்.
அமெரிக்கா மற்றும் சுதந்திர உலகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை எங்கு இருந்தாலும் குறிவைத்து தாக்குவது எங்கள் இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
