பியோங்யாங்: வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல், இறையாண்மையின் மீதான கடுமையான அத்துமீறல் என வடகொரியா கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வடகொரியா வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெனிசுலாவில் அமெரிக்கா மேற்கொண்ட ராணுவ தாக்குதல், அந்த நாட்டின் இறையாண்மையை வெளிப்படையாக மீறும் செயல் ஆகும். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் சர்வதேச சட்ட ஒழுங்குகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன. வெனிசுலாவில் நிலவும் சூழ்நிலைகளை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.
ஏற்கனவே பலவீனமான பிராந்திய சூழலில், இந்த தாக்குதல் ஸ்திரமின்மையை மேலும் அதிகரிக்கக் கூடியது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச சமூகம் நீண்ட காலமாக கண்டுவரும் அமெரிக்காவின் முரட்டுத்தனமான மற்றும் மிருகத்தனமான அணுகுமுறையை மீண்டும் ஒருமுறை இந்த சம்பவம் உறுதிப்படுத்துகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது பிராந்திய மற்றும் சர்வதேச உறவுகளுக்கு பேரழிவான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலைக்கு உலக சமூகம் உரிய எதிர்வினையாற்ற வேண்டும் என்றும் வடகொரியா தெரிவித்துள்ளது.
மேலும், ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தையும் சர்வதேச சட்டங்களையும் அமெரிக்கா வேண்டுமென்றே மீறி வருவதாக கூறியுள்ள வடகொரியா, இறையாண்மையை மீறும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக உலக நாடுகள் கண்டனக் குரல் எழுப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
