“இந்திய வேர்கள் எனக்கு பெருமை” – வர்த்தக ஒப்பந்த நிகழ்வில் ஐரோப்பிய கவுன்சில் தலைவர்
புதுடில்லி: குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டானியோ லுலூயீஸ் சான்டாஸ் டா கோஸ்டா, இந்தியாவுடன் தன்னுடைய தனிப்பட்ட தொடர்புகளை நினைவுகூர்ந்து உரையாற்றினார். இந்தியாவை பூர்விகமாக கொண்டவன் என்ற அடையாளம் தனக்கு பெருமையை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்தியா–ஐரோப்பிய யூனியன் இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறைவு நிகழ்ச்சியில் பேசிய அவர், தாம் ஐரோப்பிய கவுன்சில் தலைவராக இருந்தாலும், வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளியினராகவும் இருப்பதாக கூறினார். தனது தந்தை வழி குடும்பத்தினர் கோவாவைச் சேர்ந்தவர்கள் என்றும், அங்கிருந்து போர்ச்சுகலுக்கு குடிபெயர்ந்ததாகவும் அவர் விளக்கினார். இதன் காரணமாக இந்தியா–ஐரோப்பா உறவு தன்னிடம் அரசியல் மட்டுமல்ல, தனிப்பட்ட முறையிலும் ஆழமாக உள்ளது என்றார்.
இன்றைய உச்சி மாநாடு உலகுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்பியுள்ளது என்றும், உலக விதிமுறைகள் மாறி வரும் காலத்தில் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் நம்பகமான கூட்டாளிகளாக ஒன்றிணைந்து நிற்கின்றன என்றும் அவர் கூறினார். இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இரு தரப்புகளின் உறவு புதிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக அமைப்புகள் என்ற வகையில், குடிமக்களின் நலனுக்காக இரு தரப்பும் இணைந்து செயல்படும் என்றும் தெரிவித்தார்.
ஐரோப்பிய கவுன்சில் தலைவராக பதவி ஏற்கும் முன், அன்டானியோ கோஸ்டா போர்ச்சுகல் நாட்டின் பிரதமராக 2015 முதல் 2024 வரை பணியாற்றியுள்ளார். மேலும், அந்த நாட்டின் சோஷியலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும், அமைச்சராகவும், லிஸ்பன் நகர மேயராகவும் பதவி வகித்துள்ள அவர், ஐரோப்பிய அரசியலில் முக்கியமான தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
