இந்திய குற்றச்சாட்டு உண்மை: பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளை ஆதரிக்கிறது – பஹல்காம் தாக்குதல் ஒப்புதல்
இஸ்லமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்திற்கு பயங்கரவாத அமைப்புகளுடன் நேரடி தொடர்பு இருப்பதை, பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளான்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிரபல சுற்றுலா தலமான பஹல்காமில், கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி, பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் புகுந்து மத அடையாளங்களை கேட்டு சுட்டனர். இந்த கொடூர தாக்குதலில், இந்திய சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படைகள் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு, தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றன.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான தி ரெசிஸ்டென்ஸ் பிரன்ட் பொறுப்பேற்றுக் கொண்டது.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலின் மூளையாக செயல்பட்டதும், லஷ்கர்-இ-தொய்பாவின் துணைத் தலைவருமான ஷைபுல்லா கசூரி, பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு பள்ளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளான். அங்கு உரையாற்றிய அவன், இந்தியாவுக்கு எதிரான தீவிர கருத்துகளை வெளியிட்டதுடன், பாகிஸ்தான் ராணுவம் தங்களின் பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கு பிரார்த்தனைகளில் பங்கேற்க தன்னை அழைத்ததாக கூறியுள்ளான்.
மேலும், “நாளை இஸ்லாமும் பாகிஸ்தானும் தான்” என வெளிப்படையாக பேசிய அவன், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவை தானாகவே அம்பலப்படுத்தியுள்ளான்.
பல ஆண்டுகளாக பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளித்து வருவதாக இந்தியா குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த நிகழ்வு அந்த குற்றச்சாட்டுகளை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. சர்வதேச மேடைகளில் பாகிஸ்தானின் இரட்டை வேடம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
