இந்தியா–யு.ஏ.இ. உறவில் புதிய உயரம்: பிரதமர் மோடியுடன் அதிபர் அல் நயானின் அவசர சந்திப்பு
புதுடில்லி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அதிபர் முகமது பின் ஜாயத் அல் நயான், குறுகிய நேர சூறாவளிப் பயணமாக நேற்று டில்லி வந்து சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்த அவர், இந்தியா – UAE இடையிலான மூலோபாய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
அபுதாபியில் இருந்து விமானம் மூலம் டில்லி வந்த அதிபர் அல் நயானை, பிரதமர் மோடி விமான நிலையத்தில் நேரில் வரவேற்றார். பின்னர் இருவரும் ஒரே வாகனத்தில் பிரதமர் இல்லமான லோக் கல்யாண் மார்க்கிற்கு சென்றனர். அங்கு சுமார் 1 மணி 45 நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்பில், இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு, அணுசக்தி, உள்கட்டமைப்பு, எரிசக்தி, விண்வெளி மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் தொடர்பான ஒத்துழைப்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது, ராணுவ கூட்டாண்மைக்கான கட்டமைப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகளை விரைவுபடுத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. அதேபோல், விண்வெளி உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் அதன் வணிகமயமாக்கலுக்கான கூட்டு முயற்சிகள் தொடர்பாக, இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) மற்றும் UAE விண்வெளி ஏஜென்சி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
குஜராத்தின் தோலேரா சிறப்பு முதலீட்டு பிராந்தியத்தில் UAE பங்களிப்புடன், சர்வதேச விமான நிலையம், விமானி பயிற்சி பள்ளி, பசுமை துறைமுகம், ஸ்மார்ட் நகர்ப்புற குடியிருப்பு வசதிகள், ரயில் இணைப்பு மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், 50 லட்சம் மெட்ரிக் டன் திரவ இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்திற்கான விரிவான எரிசக்தி கூட்டாண்மையும் இறுதி செய்யப்பட்டுள்ளது. மேம்பட்ட அணுசக்தி தொழில்நுட்பங்கள், குறிப்பாக பெரிய அணு உலைகளின் மேம்பாடு மற்றும் வரிசைப்படுத்தல் தொடர்பான சிவில் அணுசக்தி ஒத்துழைப்பிற்கும் இரு நாடுகளும் புதிய வாய்ப்புகளை ஆராய முடிவு செய்துள்ளன.
செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், UAE உதவியுடன் இந்தியாவில் சூப்பர் கம்ப்யூட்டிங் கிளஸ்டர் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள AI மாநாட்டில் UAE பங்கேற்கவும் ஒப்புக்கொண்டுள்ளது. அதேபோல், சைபர் தாக்குதல் அல்லது பேரழிவு சூழ்நிலைகளில் அரசின் முக்கிய தரவுகள் மற்றும் சேவைகளை பாதுகாக்க, டிஜிட்டல் தூதரகம் அமைப்பது குறித்தும் இரு தரப்பும் உடன்பட்டுள்ளன.
ஏற்கனவே கையெழுத்தான விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) அடிப்படையில், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை ரூ.18 லட்சம் கோடி அளவிற்கு உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, குஜராத்தின் GIFT Cityயில் UAE நிறுவனங்களான First Abu Dhabi Bank மற்றும் DP World ஆகியவை செயல்பாடுகளை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய கலை, பாரம்பரியம் மற்றும் தொல்லியல் மரபுகளை உலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கில், அபுதாபியில் இந்திய கலாசார மற்றும் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வருங்கால தலைமுறைகளுக்கிடையே கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாசார புரிதலை வளர்க்க, இரு நாடுகளிலிருந்தும் இளைஞர் பிரதிநிதிகள் குழுக்கள் பரிமாற்றப் பயணம் மேற்கொள்ளவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சந்திப்பு முடிவில், பிரதமர் மோடி வழங்கிய விருந்தில் பங்கேற்ற அதிபர் அல் நயான், பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு புறப்பட்டுச் சென்றார். இந்த குறுகிய நேர சந்திப்பு, தற்போதைய உலக அரசியல் சூழலில் இந்தியா – UAE உறவுகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
