மாஸ்கோ: இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தடுக்க அமெரிக்கா மிரட்டல் மற்றும் கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றஞ்சாட்டினார்.
உக்ரைன் – ரஷ்யா போர் நான்கு ஆண்டுகளை எட்டியுள்ளது. ரஷ்யாவின் நிதி ஆதாரத்தை முடக்கினால் போர் நின்றுவிடும் என கருதிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பதாக மிரட்டல் விடுத்தார்.
இதன்படி இந்தியா மீது 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கியதற்கான அபராத வரியாக 25 சதவீதமும் அடங்கியது. ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா படிப்படியாக குறைத்து வந்த நிலையில், அபராத வரி ரத்து செய்யப்பட்டு, பரஸ்பர வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் லாவ்ரோவ் கூறியதாவது: இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தடுக்க அமெரிக்கா மிரட்டல் மற்றும் கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. வரிகள் மற்றும் தடைகள் மூலம் உலக பொருளாதாரத்தில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிக்கிறது.
மலிவான ரஷ்ய எரிபொருளை தடுத்து, அதிக விலையுள்ள அமெரிக்க எரிவாயுவை விற்க முயற்சி செய்கிறது. மேலும் ‘பிரிக்ஸ்’ நாடுகளின் வர்த்தகம், முதலீடு மற்றும் ராணுவ உறவுகளை கட்டுப்படுத்தவும் அமெரிக்கா முயல்கிறது. இந்தியாவுக்கான வரி குறைப்பில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு லாவ்ரோவ் தெரிவித்தார்.
