காத்மாண்டு: இந்தியாவுடனான உறவுகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில் செயல்படுவோம் என்று நேபாளத்தில் ஆட்சி அமைக்க உள்ள தேசிய சுதந்திர கட்சி (ஆர்.எஸ்.பி.) தலைவர் ரபி லாமிச்சானே தெரிவித்துள்ளார்.
அண்டை நாடான நேபாளத்தில் சமீபத்தில் நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில் தேசிய சுதந்திர கட்சி (ஆர்.எஸ்.பி.) குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் அந்தக் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது.
இதையடுத்து ஆர்.எஸ்.பி. தலைவர் ரபி லாமிச்சானே மற்றும் பிரதமர் வேட்பாளர் பாலேந்திர ஷாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ரபி லாமிச்சானே கூறியதாவது: நேபாள மக்களின் ஜனநாயக ஆணையை அங்கீகரித்ததற்கும், அன்பான வாழ்த்துகளை தெரிவித்ததற்கும் நன்றி.
ஆர்.எஸ்.பி. மற்றும் உருவாக இருக்கும் எங்கள் அரசு, பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட செழிப்பு என்ற அடிப்படையில் இந்தியாவுடன் உறவை வளர்க்க உறுதியாக உள்ளது.
வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு எங்கள் கட்சி முன்னுரிமை அளிக்கும். குறிப்பாக கலாசார சுற்றுலா, எரிசக்தி மற்றும் வர்த்தகம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி இரு நாடுகளின் மக்களுக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் இந்தியாவுடனான உறவை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்ல முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
