இந்தியாவுக்கு எதிரான உலகளாவிய கூட்டணியில் காங்கிரஸ்: ராகுல் குறித்து பாஜக தாக்கு
புதுடெல்லி:
இந்தியாவுக்கு எதிரான உலகளாவிய கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகித்து வருவதை அக்கட்சியின் வெளிநாட்டுப் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா ‘கவனக்குறைவாக’ அம்பலப்படுத்திவிட்டதாக பாஜக விமர்சித்துள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் ஜெர்மனிக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்தப் பயணத்தின் போது இந்தியாவுக்கு எதிரான நபர்களை அவர் சந்தித்ததாக பாஜக ஏற்கெனவே குற்றஞ்சாட்டியிருந்தது.
இந்தச் சூழலில், செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு சாம் பிட்ரோடா அளித்த பேட்டி தொடர்பாக, டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி சனிக்கிழமை பேசினார். ராகுலின் குடும்ப ஆலோசகரும், அவரது உளவியல் மற்றும் சிந்தனைகளுக்கு காரணகர்த்தாவாக இருப்பவருமான சாம் பிட்ரோடா, காங்கிரஸின் உண்மை முகத்தை ‘கவனக்குறைவாக’ வெளிப்படுத்திவிட்டதாக அவர் கூறினார்.
உலகளாவிய முற்போக்கு கூட்டணியில் (ஜிபிஏ) காங்கிரஸ் அதிகாரபூர்வ அங்கமாக இருப்பதையும், அதன் நிர்வாக வாரியத்தில் ராகுல் காந்தி இடம்பெற்றுள்ளதையும் சாம் பிட்ரோடா வெளிப்படுத்தியுள்ளதாக சுதான்ஷு திரிவேதி தெரிவித்தார். இந்தக் கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்க ராகுல் காந்தி ஜெர்மனி சென்றதாகவும் பிட்ரோடா கூறியுள்ளார் என்றார்.
இந்த உலகளாவிய முற்போக்கு கூட்டணி, இந்தியாவுக்கு எதிராக கட்டுக்கதைகளைப் புனையும் பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புடையதாக உள்ளது என்றும், இத்தகைய கூட்டமைப்பில் காங்கிரஸின் பங்கு என்ன என்பது குறித்து அக்கட்சி விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர சாத்தியக்கூறுகள் இல்லாததால், இந்திய விரோத சக்திகளின் ஆதரவை ராகுல் காந்தி நாடி வருவதாகவும், அந்த சக்திகளின் துணையுடன் ஆட்சி அதிகாரத்துக்கு வரலாம் என பகல் கனவு காண்கிறார் என்றும் சுதான்ஷு திரிவேதி விமர்சித்தார்.
மேலும், இந்திய விரோத நிலைப்பாடு கொண்ட அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரோஸின் அறக்கட்டளையால் நிதியளிக்கப்படும் மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் அறங்காவலர்களில் ஒருவரான கார்னெல்லியா வாலை, ஜெர்மனியில் ராகுல் காந்தி சந்தித்து பேசியதாகவும் அவர் கூறினார்.
2020-ம் ஆண்டு டாவோஸ் உலகப் பொருளாதார அமைப்பின் கூட்டத்தில், பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிட்டு பேசிய ஜார்ஜ் சோரோஸ், இந்தியாவில் தேசியவாத சக்திகளை ஒடுக்க ஒரு பில்லியன் டாலர் தயாராக வைத்துள்ளதாக கூறியதை நினைவுபடுத்திய சுதான்ஷு திரிவேதி, உலகளாவிய முற்போக்கு கூட்டணி என்பது 110 நாடுகளின் ஜனநாயகக் கூட்டணி என பிட்ரோடா தெரிவித்துள்ளதாக கூறினார்.
ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில் உலகின் ஜனநாயகத் தொட்டிலான இந்தியாவை களங்கப்படுத்த முயற்சிக்கும் காங்கிரஸ், அந்த 110 நாடுகளின் பெயர்களையும் வெளியிட வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
