புதுடில்லி: இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பெண்கள் முக்கிய பங்கு வகித்து வருவதாகவும், ஒவ்வொரு பெண்ணும் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க வாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியதாவது:
இந்தியாவின் பெண் சக்தியின் சாதனைகள் பெருமைக்குரியவை. தேசத்தை கட்டியெழுப்புவதில் பெண்கள் மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய பங்கை வகித்து வருகின்றனர்.
இந்தியா தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், பெண்களின் விருப்பங்களும் பங்களிப்புகளும் வளமான தேசத்தை நோக்கிய பயணத்தை வழிநடத்தி வருகின்றன.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண்களுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு துறையிலும் பெண்கள் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக ஒப்பிடமுடியாத அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
பெண்களின் சாதனைகள் தேசத்திற்கு ஊக்கமாக இருப்பதுடன், வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்கும் பயணத்தையும் வலுப்படுத்துகின்றன.
பெண்களுக்கு அதிகாரமளிக்க பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பெண்ணும் தனது முழு திறனையும் வெளிப்படுத்தி இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்களிக்க தேவையான வாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு உறுதியாக உள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் அடிமட்டத்தில் இருந்த பெண்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
