‘‘இதுதான் அமைப்பின் சக்தி’’ – ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு திக்விஜய் சிங் புகழாரம்
புதுடெல்லி:
தலைவர்களின் காலடியில் அமர்ந்திருந்த ஒருவர் மாநிலத்தின் முதல்வராகவும் நாட்டின் பிரதமராகவும் உயர்ந்தார்; இதுதான் அமைப்பின் சக்தி என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ள சமூக வலைதள பதிவு, காங்கிரஸ் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்கு முன்பாக, மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங், தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அந்த பதிவில், இணையத்தில் பார்த்த ஒரு புகைப்படம் தன்னை வெகுவாக ஈர்த்ததாகவும், அது அமைப்பின் சக்தியை வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ‘‘குவாரா தளம். இது என்னை மிகவும் ஈர்த்தது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிமட்ட சுவயம்சேவக், ஜன சங்கம் மற்றும் பாஜகவின் தொண்டர், எவ்வாறு தலைவர்களின் காலடியில் அமர்ந்து மாநிலத்தின் முதல்வராகவும் நாட்டின் பிரதமராகவும் ஆனார். இதுதான் அமைப்பின் சக்தி. ஜெய் சீதா ராம்’’ என அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவுடன், பாஜக மூத்த தலைவர் அத்வானி கலந்துகொண்ட ஒரு பொதுநிகழ்ச்சியில், அவரது காலடியில் தரையில் நரேந்திர மோடி அமர்ந்திருந்த பழைய புகைப்படத்தையும் திக்விஜய் சிங் பகிர்ந்துள்ளார். மேலும், இந்த பதிவை அகில இந்திய காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஜெயராம் ரமேஷ் ஆகியோருக்கும் பகிர்ந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கும் இதை அவர் அனுப்பியுள்ளார்.
இதனிடையே, திக்விஜய் சிங்கின் பதிவை டேக் செய்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.கேசவன் தனது எக்ஸ் பதிவில், ‘‘காங்கிரஸ் முதல் குடும்பம் எவ்வாறு இரக்கமின்றி சர்வாதிகார முறையில் கட்சியை நடத்துகிறது என்பதையும், காங்கிரஸ் தலைமை எவ்வளவு ஜனநாயக விரோதமாக இருக்கிறது என்பதையும் அதிர்ச்சியூட்டும் உண்மை வெடிகுண்டை வீசி திக்விஜய் சிங் அம்பலப்படுத்தியுள்ளார். இதற்கு பதில் அளிக்கும் தைரியம் ராகுல் காந்திக்கு உண்டா?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செய்தியாளர்கள் இது குறித்து திக்விஜய் சிங்கிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ‘‘நான் ஆர்எஸ்எஸ் மற்றும் மோடியை எதிர்க்கிறேன். அதே நேரத்தில், அதன் கட்டமைப்பை ஆதரிக்கிறேன். அமைப்பைத்தான் நான் பாராட்டியுள்ளேன். நான் ஆர்எஸ்எஸ் மற்றும் மோடியின் தீவிர எதிர்ப்பாளராக இருந்தேன்; இருக்கிறேன்; இருப்பேன். ஒரு அமைப்பின் வலிமையைப் பாராட்டுவது தவறா?’’ என தெரிவித்துள்ளார்.
