ஆர்.எஸ்.எஸ்., ஒரு தேசியவாத அமைப்பு; ஒருபோதும் முஸ்லிம் எதிர்ப்புணர்வை கொண்டிருப்பதில்லை: மோகன் பாகவத்
ஆர்.எஸ்.எஸ். ஒரு தீவிர தேசியவாத அமைப்பு என்றும், அதற்கு ஒருபோதும் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வு இல்லை என்றும் அதன் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 100-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். அந்த உரையில், சூரியன் கிழக்கில் உதிப்பதற்கு அரசியலமைப்பின் ஒப்புதல் தேவையில்லை என்பதுபோல், ஹிந்துஸ்தான் ஒரு ஹிந்து தேசம் என்ற கருத்து இயல்பான உண்மை என அவர் கூறினார்.
இந்தியாவை தங்கள் தாய்நாடாக கருதி, இந்திய கலாசாரத்தை பாராட்டுபவர்கள் இருக்கும் வரை, இந்தியா ஒரு ஹிந்து தேசமாகவே இருக்கும் என்றும், இதுவே ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் என்றும் மோகன் பாகவத் விளக்கினார். எதிர்காலத்தில் பார்லிமென்ட் அரசியலமைப்பை திருத்தி, ‘இந்தியா ஒரு ஹிந்து தேசம்’ என்ற வார்த்தையை சேர்க்க முடிவு செய்தாலும், அல்லது சேர்க்காவிட்டாலும், அதைப்பற்றி தங்களுக்கு கவலை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஹிந்துத்வா என்பது பிறப்பை அடிப்படையாக கொண்ட ஜாதி அமைப்பு அல்ல என்றும், பண்பாடு மற்றும் பெரும்பான்மை ஹிந்து மத தொடர்புகளை அடிப்படையாக கொண்டு இந்தியா ஒரு ஹிந்து தேசம் என ஆர்.எஸ்.எஸ். வாதாடி வருவதாகவும் அவர் கூறினார். மேலும், ‘மதச்சார்பற்ற’ என்ற சொல்லு ஆரம்பத்தில் அரசியலமைப்பின் முகவுரையில் இடம்பெறவில்லை என்றும், 1976ஆம் ஆண்டு, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் அவசரநிலைச் சூழலில் அரசியலமைப்பு திருத்தம் மூலம் ‘சோசலிசம்’ மற்றும் ‘மதச்சார்பின்மை’ என்ற சொற்கள் சேர்க்கப்பட்டதாகவும் அவர் நினைவுபடுத்தினார்.
தவறான பிரசாரங்களால், ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம்களின் எதிரி என்ற பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், உண்மையில் அது ஒரு தீவிரமான தேசியவாத அமைப்பு மட்டுமே என்றும், முஸ்லிம் எதிர்ப்பு உணர்வு எப்போதும் இல்லை என்றும் அவர் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகளை நேரில் பார்த்தவர்கள், இந்த அமைப்பு ஹிந்துக்களை ஒருங்கிணைக்கிறது; ஆனால் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என தெரிவித்துள்ளதாகவும், ஆகவே விமர்சிப்பவர்கள் அமைப்பின் செயல்பாடுகளை நேரில் வந்து பார்க்க வேண்டும் என்றும் மோகன் பாகவத் வலியுறுத்தினார்.
எதிர்மறையான முஸ்லிம் எதிர்ப்பு உணர்வு இருப்பது எங்காவது தெரிந்தால், அதைச் சுட்டிக்காட்டினால் ஏற்றுக்கொள்வோம் என்றும், அப்படி இல்லையென்றால் ஆர்.எஸ்.எஸ். குறித்து கொண்டுள்ள எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், அமைப்பின் கருத்துகளை புரிந்துகொள்ள விரும்பாதவர்களின் மனதை யாராலும் மாற்ற முடியாது என்றும் குறிப்பிட்டார்.
இறுதியாக, அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினராக வாழும் ஹிந்துக்கள் தாக்கப்படுவதாக கூறிய அவர், இந்தியாவில் உள்ள ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதை கண்டித்து, அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உரையாற்றினார்.
