ஆயுதம் ஏந்தவும் தயார்; டிரம்ப் அச்சுறுத்தலுக்கு கொலம்பியா அதிபர் பெட்ரோ கடும் பதிலடி
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட கடும் அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக, கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, “தாய்நாட்டிற்காக ஆயுதம் ஏந்தவும் தயார்” என தெரிவித்துள்ளார்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவ நடவடிக்கையை குறிப்பிட்டு, கொலம்பியாவுக்கும் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், கொலம்பியா அதிபர் பெட்ரோவை நோய்வாய்ப்பட்டவர் என்றும், கோகைன் தயாரித்து அமெரிக்காவில் விற்பனை செய்வதில் ஈடுபடுபவர் என்றும் அவர் விமர்சித்திருந்தார்.
பெட்ரோவின் பதிலடி
இதற்கு பதிலளித்து பெட்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் மீண்டும் ஆயுதத்தைத் தொட மாட்டேன் என்று சபதம் செய்திருந்தேன். ஆனால், தாய்நாட்டிற்காக மீண்டும் ஆயுதம் ஏந்துவேன். டிரம்பின் சட்டவிரோத அச்சுறுத்தல்களின் உண்மையான நோக்கத்தை புரிந்து கொண்ட பின் அவருக்கு உரிய பதிலை அளிப்பேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும், கொலம்பியாவின் அரசியலமைப்பை படிக்குமாறு டிரம்பை அவர் வலியுறுத்தினார். “அமெரிக்கா–கொலம்பியா உறவுகளில் முறிவை சிலர் விரும்புகிறார்கள். நீங்கள் என்னை கைது செய்தால், என் மக்கள் போராட்டத்தில் இறங்குவார்கள். நான் சட்டவிரோதமானவன் அல்ல; போதைப்பொருள் கடத்தல்காரனும் அல்ல” என்றும் கூறினார்.
குற்றச்சாட்டுகள் மறுப்பு
தனது ஒரே சொத்து குடும்ப வீடு மட்டுமே என்றும், அதற்கான கட்டணத்தை இன்னும் தனது சம்பளத்தில் செலுத்தி வருவதாகவும் பெட்ரோ தெரிவித்துள்ளார். தனது வங்கி கணக்கு விவரங்களை வெளியிட்டுள்ளேன்; சம்பளத்தை விட அதிகமாக செலவு செய்தேன் என்று யாராலும் நிரூபிக்க முடியாது என்றும் கூறினார்.
“நான் பேராசை கொண்டவன் அல்ல. என் மக்கள்மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது,” என பெட்ரோ தனது அறிக்கையில் தெரிவித்தார்.
