காபூல்: ஆப்கானிஸ்தான்-ல் கனமழை மற்றும் பனிப்பொழிவுக்கு இடையே ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபிசா, பர்வான், டாய்கண்டி, உருஸ்கான், கந்தஹார், ஹெல்மண்ட், பாட்கிஸ், பர்யாப், படக்ஷான் மற்றும் ஹெராத் உள்ளிட்ட மாகாணங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், சில இடங்களில் மின்சாரம் தாக்கியும் இதுவரை மொத்தம் 17 பேர் உயிரிழந்ததாகவும், 11 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டின் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 1,200 கால்நடைகள் உயிரிழந்ததாக ஆப்கன் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
