புதுடில்லி: டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 23 பேரை விடுதலை செய்து ரூஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ டில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
ஆம்ஆத்மி ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்ட புதிய மதுபானக் கொள்கையில், தனியார் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும், அதற்காக நிதி பரிமாற்றம் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த தொகை கோவா சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தனித்தனியாக வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டன.
விசாரணையின் போது கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். துணை முதல்வர் மணீஷ் சிஷோடியா உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி, நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்தது. தீர்ப்பை கேட்டதும் கெஜ்ரிவால் உணர்ச்சிவசப்பட்டார். டில்லி மற்றும் பஞ்சாபில் ஆம்ஆத்மி கட்சியினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
