சென்னை: தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரசுக்கு உரிமை இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனித்த நோக்கம் இருப்பதாகவும், அந்த நோக்கத்தின் அடிப்படையில் கோரிக்கைகளை முன்வைப்பது இயல்பானதுதான் என்றும் கூறினார். விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அரசியலில் இணைந்த காலம் முதல் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக நினைவூட்டினார்.
1999ம் ஆண்டு முதல் இந்த கருத்தை முன்வைத்து வருவதாகவும், 2016ம் ஆண்டு தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்த கருத்தரங்கையும் அனைத்து கட்சித் தலைவர்களை அழைத்து நடத்தியதாகவும் தெரிவித்தார். எனினும், இக்கோரிக்கையை நடைமுறைப்படுத்த தேவையான அரசியல் சூழல் தமிழகத்தில் இன்னும் முழுமையாக உருவாகவில்லை என அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளதாக கூறினார்.
தற்போதைய தேர்தல் சூழலில் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு பலவீனம் உருவாகக் கூடாது என்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும், அதனால் இந்த தருணத்தில் கூட்டணி ஆட்சி கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் விளக்கினார். ஆனால், அந்த கோரிக்கையை கைவிட்டதாக அல்ல என்றும் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கோரிக்கை முன்வைப்பது அவர்களின் உரிமை எனவும், அது கட்சிக்குள்ளோ அல்லது கூட்டணிக்குள்ளோ பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படலாம் என்றும் தெரிவித்தார். முதல்வர் இதுகுறித்து ஏற்கனவே விளக்கம் அளித்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அரசியல் சூழலுக்கு பொருந்தாது என்ற நிலைப்பாடு இருந்தாலும், கோரிக்கையை மீண்டும் முன்வைப்பதில் தவறு இல்லை என்றார்.
காங்கிரஸ் – திமுக கூட்டணி நீடிக்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்ட திருமாவளவன், பேச்சுவார்த்தையின் மூலம் சுமுகமான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளார்.
