புதுடில்லி: இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்.,7ம் தேதி மலேசியா செல்ல உள்ளார்.
இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதமர் மோடி மேற்கொள்ளும் இந்த மலேசிய பயணம், அவர் அந்நாட்டுக்கு செல்லும் மூன்றாவது பயணம் ஆகும். கடந்த 2024 ஆகஸ்டில், இந்தியா–மலேசியா இருதரப்பு உறவு ‘வலுவான கூட்டாண்மை’ நிலைக்கு உயர்த்தப்பட்ட பிறகு, பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இந்தப் பயணத்தின் போது, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் பிரதமர் மோடி உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில் பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
பயணத்தின் ஒரு பகுதியாக, 10-வது இந்தியா–மலேசியா தலைமைச் செயல் அதிகாரிகள் (CEO) மாநாடு நடைபெற உள்ளது. இதில் இரு நாடுகளைச் சேர்ந்த முன்னணி தொழில் அதிபர்கள் பங்கேற்க உள்ளனர்.
மேலும், மலேசியாவில் வாழும் இந்திய சமூகத்தினரையும், வணிக பிரதிநிதிகளையும் சந்தித்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவை மேலும் வலுப்படுத்தும் முக்கியக் கட்டமாக, பிரதமர் மோடியின் இந்த பயணம் பார்க்கப்படுகிறது.
இவ்வாறு வெளியுறவு அமைச்சக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
