சுல்தான்பூர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஜனவரி 19ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என, உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள எம்பி–எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
2018ம் ஆண்டு கர்நாடகா சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, அமித் ஷா குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாகக் கூறி, பாஜ தலைவர் விஜய் மிஸ்ரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக சுல்தான்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் காஷி பிரசாத் சுக்லா, அரசு தரப்பு சாட்சியான ராம் சந்திரா துபேவிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்த கட்ட விசாரணைக்காக ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, இதே அவதூறு வழக்கில், முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜராக தவறிய காரணத்தால், ராகுல் காந்தி கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
