சென்னை: கருணாநிதியின் மகன் அழகிரியின் ஆதரவாளரான மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்ஐ சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
2014ம் ஆண்டு மதுரையில் அழகிரி பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் திமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். பின்னர் குடும்ப மட்டத்தில் சமாதானம் ஏற்பட்டதாக கூறப்பட்டாலும், ஆதரவாளர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படவில்லை.
சில மாதங்களுக்கு முன், தன் வீட்டுக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதியிடம், ஆதரவாளர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என அழகிரி வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியானன. ஆனால், திமுக தலைமையிலிருந்து இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதனால் அரசியல் எதிர்காலம் குறித்து அதிருப்தி அடைந்த அழகிரி அணியினர், மாற்று அரசியல் தளத்தை தேர்வு செய்யும் நிலைக்கு வந்ததாக கூறப்படுகிறது. அந்த வரிசையில், அழகிரியின் தீவிர ஆதரவாளரான முன்னாள் துணை மேயர் மன்னன், சென்னையில் இபிஎஸ்ஐ சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
இணைந்த பிறகு மன்னன் கூறுகையில், வரும் சட்டசபை தேர்தலில் மதுரை மாவட்டத்தில் அதிமுக கூட்டணி கணிசமான வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். இபிஎஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்றும், மேலும் பலர் அதிமுகவில் இணைய உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
