அறிவாலயம், அண்ணா சாலை முன் போராட்டம்; தூய்மைப் பணியாளர்கள் கைது
சென்னை: சென்னை மாநகராட்சியில் மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்கள் 1,013 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
ராயபுரம் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பணி நிரந்தரம் மற்றும் மாநகராட்சியில் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் எனக் கோரி துாய்மை பணியாளர்கள் கடந்த சில மாதங்களாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, நேற்று காலை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தை முற்றுகையிட முயன்றனர். போலீசார் தடுத்ததைத் தொடர்ந்து, அறிவாலயத்தின் பின்புறம் உள்ள ஸ்கீம் சாலை வழியாக அவர்கள் திடீரென நுழைந்தனர். இதையடுத்து, அண்ணா சாலையின் நடுவே அமர்ந்தும், படுத்தும் பல பெண் துாய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸ் வாகனத்தின் முன் சக்கரத்தின் அருகே தலையை வைத்து ஒரு பெண் பணியாளர் படுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
போராட்டத்தின் போது, ஒரு பெண் பணியாளர் திடீரென மயக்கமடைந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதேபோல், பிற்பகல் 2 மணியளவில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம், அண்ணா சாலை ஓமந்துாரார் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளிலும் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெற்றன. இதனால், போக்குவரத்தை கட்டுப்படுத்த போலீசார் கடும் சிரமம் அடைந்தனர்.
இரவு 10.30 மணியளவில் ரிப்பன் மாளிகை அருகே திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். ஒரே நாளில் 1,100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெண் துாய்மை பணியாளர்கள் கூறுகையில், இந்த வேலையை நம்பித்தான் தங்களது வாழ்க்கை நடைபெறுகிறது என்றும், ஐந்து மாதங்களாக போராடியும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும், முதல்வர் நேரடியாக தலையிட்டு, துாய்மை பணியாளர்களின் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
