அறநிலையத்துறை அதிகாரிகளை உள்ளே விட மாட்டோம் என கோவில் முன் திரண்ட மக்களால் பரபரப்பு
நெகமம்:
நெகமம் வீரமாச்சியம்மன் கோவிலுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் வருவதாக பரவிய தகவலையடுத்து, கோவில் முன்பு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நெகமம் வீரமாச்சியம்மன் கோவில் சுமார் 150 ஆண்டுகள் பழமையானது. கோவில் வளாகத்தில் நான்கு கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. கோவை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த கோவில் குலதெய்வமாக விளங்குகிறது. மேலும், அனைத்து தரப்பு மக்களும் வழிபடும் முக்கிய தலமாகவும் இது உள்ளது.
இந்த கோவிலின் நிர்வாகத்தை கவனித்து வந்த மாரிமுத்து என்பவருக்கும், கோவில் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, மாரிமுத்து தரப்பில் கோவில் கணக்குகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும், கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்றும், கணக்குகளை அரசு தரப்பில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதற்கு எதிராக கோவில் நிர்வாக குழுவினர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில், இன்று அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியானது. இதை அறிந்த பொதுமக்கள், அதிகாரிகளை கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி கோவில் முன்பு திரண்டு வழிமறித்து காத்திருந்தனர். இதனால் அதிகாரிகள் கோவிலுக்கு வரவில்லை.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து வந்த போலீசார், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியாக கலைந்து செல்ல அறிவுறுத்தியதையடுத்து, மக்கள் அங்கிருந்து சென்றனர்.
பொதுமக்கள் கூறுகையில்,
“மூன்று தலைமுறைகளாக இந்த கோவிலுக்கு வழிபட்டு வருகிறோம். பலருக்கு இது குலதெய்வம். தனிநபர் தொடரும் வழக்கால் தேவையற்ற பிரச்னை உருவாகி வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றிணைந்து வழக்கு தொடர்ந்தும், அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவது வேதனை அளிக்கிறது. இதுவரை அறநிலையத்துறை உதவி இன்றி கோவிலை நன்றாக பராமரித்து வந்துள்ளோம். தற்போது அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிப்பதை ஏற்க முடியாது. அறநிலையத்துறை அதிகாரிகளை கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டோம்” என தெரிவித்தனர்.
