புதுடில்லி: வந்தே மாதரம் பாடலை அரசு விழாக்களில் பாடுவதை கட்டாயமாக்கும் மத்திய அரசின் உத்தரவு ஒருதலைபட்சமானது மற்றும் தன்னிச்சையானது என முஸ்லிம் அமைப்பான ஜமியத் உலமா-இ-ஹிந்த் தெரிவித்துள்ளது.
வங்க மொழி கவிஞர் பக்கிம் சந்திர சட்டர்ஜி கடந்த 1875 நவம்பர் 7ஆம் தேதி வந்தே மாதரம் பாடலை இயற்றினார். 1937ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ், வந்தே மாதரம் பாடலை தேசிய பாடலாக ஏற்றுக்கொண்டது. மொத்தமுள்ள ஆறு சரணங்களில் இரண்டு சரணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன. மற்ற நான்கு சரணங்கள் ஹிந்து கடவுள்களை போற்றும் வகையில் இருந்ததால் அவற்றை நீக்க முடிவு செய்யப்பட்டது.
தேசிய கீதத்துக்கு வழங்கப்படும் மரியாதையைப் போல தேசிய பாடலான வந்தே மாதரம் மதிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதில் அதிகாரப்பூர்வ அரசு விழாக்கள் மற்றும் பள்ளிகளில் அனைத்து ஆறு சரணங்களும் அடங்கிய வந்தே மாதரம் பாடல் கட்டாயம் பாடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி கூறியதாவது: அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடலின் அனைத்து பத்திகளும் பாடப்பட வேண்டும் என்பது ஒருதலைபட்சமான மற்றும் தன்னிச்சையான முடிவு. இது மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல; சிறுபான்மையினரின் உரிமைகளை குறைக்கும் முயற்சியாகும்.
முஸ்லிம்கள் யாரும் வந்தே மாதரம் பாடுவதையோ இசைப்பதையோ தடுப்பதில்லை. ஆனால் பாடலின் சில வரிகள் தாயகத்தை ஒரு தெய்வமாக சித்தரிக்கின்றன. இது மத நம்பிக்கைகளுக்கு முரணானது. ஒரு இஸ்லாமியன் ஒரே அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதால் இந்த பாடலை பாட கட்டாயப்படுத்துவது அரசியலமைப்பு மீறலாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
