வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் **மார்கோ ரூபியோ**வை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
இந்திய பொருட்கள் மீதான அமெரிக்க வரிவிதிப்பு 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா சென்றுள்ள ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, இருதரப்பு வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
சந்தித்ததில் மகிழ்ச்சி
இது குறித்து ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்ததில் மகிழ்ச்சி. எங்கள் இருதரப்பு உறவு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம்.
இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவை வர்த்தகம், எரிசக்தி, அணுசக்தி, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மார்கோ ரூபியோவும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடிக்கு இடையே எட்டப்பட்ட வரி குறைப்பு முடிவை வரவேற்றனர். மேலும், குவாட் அமைப்பு மூலம் இந்தியா – அமெரிக்கா உறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
முன் சந்திப்பு
இதற்கு முன்னதாக, அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் அவர்களையும் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்த ஜெய்சங்கர் கூறியதாவது:
வெள்ளை மாளிகையில் அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்டை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா – அமெரிக்கா இடையேயான பொருளாதார உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
